பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

கட்டுரைத் தொகுப்பு இவர் வெளியீடுகளுள் மிகச் சிறந்ததாகும். ‘கானல் வரி' என்னும் ஆராய்ச்சி நூல் சிலப்பதிகாரத்தின் சீர்மையைக் காட்டும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறைப் பேராசிரியராகவும்: மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும், பணியாற்றித் தமிழுக்கும் கல்வித்துறைக்கும் பெருந் தொண்டாற்றியுள்ளார். இவரைப் பல்கலைச் செல்வர் எனப் பாராட்டுவர்.

டாக்டர் வ. சுப மாணிக்கம்

‘வள்ளுவம்’ என்னும் குறள் விளக்க நூலும் ‘தமிழ்க் காதல்’ என்னும் ஆராய்ச்சி நூலும் இவரது ஆராய்ச்சித் திறனைப் புலப்படுத்துவனவரகும். மேலும், நெல்லிக்கனி, மனைவியின் உரிமை, உப்பங்கழி முதலாய பல நாடக நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராய்ப் பணியாற்றிய இவர், மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராய் விளங்கினார். சங்க இலக்கிய ஆய்வுகளில் இவருக்குத் தனி இடம் உண்டு.



8. இருபதாம் நூற்றாண்டு
கவிதையியல்

1. பாரதியார்

இருபதாம் நூற்றாண்டில் கவிதை இலக்கியம், மக்கள் வாழ்வோடு இணைந்து வளர்ந்தது. நாட்டைப் பற்றியும். மக்களைப் பற்றியும், மொழியைப் பற்றியும் கவிதைகள் எழுந்தன. இந்நிலைக்கு வித்திட்டுப் புதுயுகப் புரட்சிக் கவிஞராக விளங்கியவர் சுப்பிரமணிய பாரதியாராவார். இவர் உணர்ச்சிமிக்க கவிதைகளைப் பாடி, மக்களை எழுச்சி