பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

என்றும் பெண்ணுரிமை பற்றி அவர் குரல் கொடுக்கிறார்.

‘பாஞ்சாலி சபதம்’ எனும் தலைப்பில் பாரதக் கதையினைப் புதுமை நோக்கோடு பாடியுள்ளார். இவர் பாடிய குயில் பாட்டு கற்பனை நயம்மிக்க காதற் காவியமாகும்.

பாரதியார் வாழ்வின் மலர்ச்சிக்கும் புதுயுகப் புரட்சிக்கும் வழிகோலினார்; மனிதன் சம உரிமை பெற்று வாழவேண்டும் எனக் கனவு கண்டார். 1921-ல் மறைந்தார்.


2 கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

இவர் குழந்தைகளுக்காக எளிய இனிய பாடல்கனைத் தந்து ‘குழந்தைக் கவிஞர்' எனப் பாராட்டப்படுகிறார். உமர்கய்யாம் பாடல்களை மொழிபெயர்ப்பெனத் தோன்றா வகையில் தமிழாக்கம் செய்துள்ளார். எட்வின் ஆர்னால்டு எழுதிய 'திலைட் ஆஃப் ஏசியா' என்ற நூலை “ஆசிய ஜோதி" எனும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.

‘உள்ளத்துள்ளது கவிதை-இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்-உண்மை
தெரிந் துரைப்பது கவிதை'

இஃது அவர் கவிதைக்குத் தரும் இலக்கணமாகும். அவர் பாடலும் இவ்விதிக்கு விலக்கன்று. அவர் பாடிய தனிப்பாடல்களும் தொடர் பாடல்களும், ‘மலரும் மாலையும்' எனும் பெயரில் வெளிவந்துள்ளன. ‘தேவியின் கீர்த்தனைகள்' அவருடைய இசைப் பாடல்களின் தொகுப்பாகும். ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்’ எனும் நகைச்சுவை மிக்க கவிதை நூலொன்றையும் எழுதியுள்ளார்.