பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. சங்க காலம்
(கி.மு. 500 - கி.பி. 200)


கி.மு. 500 முதல் கி.பி. 100 வரை சங்க இலக்கிய காலமாகும். தொல்காப்பியர் காலம் கி.மு. 300 என்பர். சங்க இலக்கியப் பாடல்கள் தனித்தனிப் பாடல்களாகும். அவை பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை, பின் வந்தவர் இவற்றைத் தொகுத்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என வகைப்படுத்தினர். இவை பொருள், அடிவரையரை கருதித் தொகுக்கப்பட்டுள்ளன. அகம், புறம் என்பன பொருள் பற்றிய பாகுபாடுகளாகும் முதலில் இவை வாய் மொழி இலக்கியமாக வழங்கியிருக்க வேண்டும் என்றும், இவற்றுக்குப் புலவர்கள் எழுத்து வடிவு தந்தனர் என்றும் கூறுவர். இவற்றை ஆராய்ந்து இவற்றின் மரபையும், பொருளையும் கண்டு இலக்கண நூல்களை இயற்றினர். புறச்சார்பு ஏதுமின்றி மக்கள் உணர்வுகளினின்று இயற்கையாகத் தோன்றிய காதல் பாடல்களும் வீரப் பாடல்களும் சங்க இலக்கியங்களாயின.

மூன்று சங்கங்கள்

புலவர்களையும், அறிஞர்களையும் தன்னகத்தே கொண்டதொரு அமைப்பே சங்கமாகும். கி.பி. 4, 5 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சமணத்துறவிகள் சங்கங்களைத் தோற்றுவித்துக் கல்வித் தொண்டும், சமயப் பணியும் செய்து வந்தனர். அவர்கள் காலத்துச் சங்கங்களைப்போலவே பழங்காலத்திலும் சங்கங்கள் இருந்திருக்க வேண்டும் எனப் பிற்காலத்தார் கருதினர். சங்கங்களில் அமர்ந்து புலவர்கள்

த-2