பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

இயங்குகிறது. இவற்றுள் நாடகம் பண்டைக் காலத்தில் இசைப் பாடலுக்கு இசைய ஆடிய ஆடலைக் குறித்தது.

தொடர் நிகழ்ச்சிகளைக் கொண்ட குழு நாடகமாக நடிக்கப்பட்டமைக்குச் சோழர் காலத்தில்தான் கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. இராசராசன்வரலாறு, அவன் கட்டிய இரசேச்சுவரம் எனும் கோயிலில் ஆண்டுதோறும் நாடகமாக நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நாயக்கர் காலத்தில் பள்ளு, குறவஞ்சி நாடகங்கள் நடிக்கப்பட்டன.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இசை நாடகங்கள் சில தோன்றின. அருணாசல கவிராயர் எழுதிய இராம நாடகமும், கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய நந்தனார் சரித்திரமும் அவற்றுள் குறிப்பிடத் தக்கனவாகும்.

19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தமிழ் நாடகம், முழு வளர்ச்சியை அடைந்ததெனக் கூறலாம். பரிதிமாற் கலைஞர், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் முதலியோர் மேலை நாட்டுப் பாணியில் தமிழ் நாடகங்களை எழுதி நடித்தனர்.

பரிதிமாற் கலைஞர் ‘நாடகவியல்’ எனும் நாடக இலக்கண நூல் ஒன்றையும், ருபாவதி, கலாவதி, மான விஜயம் எனும் மூன்று நாடகங்களையும் வெளியிட்டார். பம்மல் சம்பந்த முதலியார் தொண்ணுறு நாடகங்களை எழுதினார் ‘சுகுண விலாச சபா’ என்ற நாடகக் குழு ஒன்றினைத் தோற்றுவித்து, நடிப்புக் கலையை வளர்த்தார். அவர் எழுதிய நாடகங்களுள் 'மனோகரா’ என்பது புகழ் வாய்ந்த நாடகமாகும்.