பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

உரைநடையாக்கம்

வட மொழி வான்மீகி இராமாயணத்தையும், வியாசர் பாரதத்தையும் மூதறிஞர் இராசாசி உரை நடையில் தந்துள்ளார். மூலக்கதைகளை அறிய இவ் உரைநடை நூல்கள் மிகவும் பயன்படுகின்றன. காவியங்கள் மக்கள் மன்றத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதனை அடுத்துக் கம்பராமாயணத்தையும், வில்லி பாரதத்தையும், சீவக சிந்தாமணியையும் அழகிய இனிய எளிய நடையில் டாக்டர் ரா, சீ. உரைநடை நூல்களாகத் தந்துள்ளார்.

திருக்குறளுக்குப் பழைய உரை பரிமேலழகர் உரை புலவர்க்கு மட்டும் விளங்குவதாக இருந்தது: திருக்குறள் தெளிவுரை ஒன்று தந்து யாவரும் திருக்குறளை அறிய உதவும் வகையில் டாக்டர் மு.வ. நூல் தந்தார்; அதனை அடுத்துப் பல தெளிவுரை நூல்கள் வெளி வந்துள்ளன. ‘திருக்குறள் செய்திகள்' என்னும் உரைநடை நூல் புதுக்கவிதை நடையில் டாக்டர் ரா. சீ. தந்துள்ளார். மூல நூல் படிக்காமலேயே திருக்குறள் கருத்துகளை அறிய இது உதவுகிறது. இதுவரை யாரும் செய்யாத புது முயற்சி; ஆற்றொழுக்காகத் திருக்குறள் செய்திகளை அனைவரும் அறியும் வகையில் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.

காவியங்கள் உரை நடையாக்கம் பெறுவதால் அவை எளிதில் பரவுகின்றன. இது புது முயற்சியாக அமைத்துவருகிறது.

◯◯◯