பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

புலவர்கள் பாடியுள்ளனர். ஒளவையார். அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடினியார், வெள்ளி வீதியார் முதலிய பெண்பாற் புலவர்களின் பாடல்களும் இதன் கண் இடம் பெற்றுள்ளன. இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.

பாரி, ஓரி. மலையமான், அஞ்சி, ஆய், நன்னன், நள்ளி, கட்டி, அகுதை முதலான குறுநில மன்னரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் குறுத்தொகை தருகிறது.

தலைவியின் அன்பு நெஞ்சினை அழகு ஓவியமாகப் படைத்துக் காட்டுகிறார் புலவர் ஒருவர். தான் சமைத்த உணவைத் தன் கணவன் இனிதென உண்ணும் போது பெரிதும் மகிழ்கிறாள் தலைவி ஒருத்தி, இல்லறத்தின் இனிமை இதில் இனிதாக இனிக்கிறது.

' முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துஉ டீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே'

ஐங்குறுநூறு

இதன் கண்ணுள்ள மருதப் பாடல்களை அம்மூவனாரும், குறிஞ்சிப் பாடல்களைக் கபிலரும், பாலைப் பாடல்களை ஓதலாந்தையாரும், முல்லைப் பாடல்களைப் பேயனாரும் இயற்றியுள்ளனர்.

பெருந்தேவனார் இதற்கும் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.