பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

செய்திகளும், பண்பாட்டுக் கூறுகளும் இடம் பெற்றுள்ளன. நந்தர் , மோரியர் முதலியோர் பற்றிய குறிப்புகளும், கடையெழு மன்னர்கள், குறுநில மன்னர்கள், மூவேந்தர் பற்றிய செய்திகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன. தமிழகத்தின் மலைகளும், ஆறுகளும், நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

சோலையில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றில் பெடையும் வண்டும் பெட்புடன் படிந்து தேன் உண்டு தம்மை மறந்து கிடக்கின்றன. வினைமுடித்து மீளும் தலைமகன் அவ்வழியே தேரூர்ந்து வருகிறான்; இக்காட்சியைக் காண்கிறான். தன் தேர் மணி நாவொலி அவற்றின் இன்பத்திற்கு இடையூறு தருமே - எனக் கலங்குகிறான்; மணிகளிள் நாவை அசையாவாறு கட்டித் தேரைச் செலுத்துகிறான்.

‘பூத்த பொங்கர்த் துணையோடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண்வினைத் தோன்'

பதிற்றுப்பத்து

இது சேரவேந்தர் பதின்மரைப்பற்றிய பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய நூறு புறப்பாடல்களின் தொகுப்பாகும், சேர மன்னர்களின் வீரம், வெற்றிச் சிறப்புகள், கொடை, உயர் பண்பாடு, நீதி வழங்கும் முறை, அறம் வளர்த்த திறம். அஞ்சாமை, நாகரிகம் முதலிய பல செய்திகளை இதனால் அறியலாம்.

ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் ஒன்று காணப்படுகிறது. அஃது அப்பத்தால் பாடப்பெறும் மன்னன் பெயர், அவனது வெற்றி. கொடைத்திறம், பாடிய புலவர், அவர் பெற்ற பரிசில் முதலியவற்றைக் கூறுகிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை,