பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பண்பாடு, நீதி, அறம், அஞ்சாமை: நாகரிகம் முதலியவற்றை இந் நூலால் அறியலாம்.

சேர, சோழ பாண்டிய மன்னர்களின் வெற்றியையும், செங்கோன்மைச் சிறப்புகளையும், குறுநில மன்னர்களின் கொடைச் சிறப்பையும் இது விளக்குகிறது. ஔவையும், அதிகமானும் அன்பும் பண்பும் பொருந்தக் கொண்ட நட்பின் திறமும், பாரியும் கபிலரும் கொண்ட மாரியும் நிலமும் போன்ற நெருங்கிய தொடர்பும் உணர்வுமிக்க சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. நாட்டு மன்னனிடம் வீரர்கள் காட்டிய அன்பும், அவனுக்காக அஞ்சாமல் உயிர் துறந்த வீர வரலாறும் சிறப்பாகப் பேசப்படுகின்றன. சுருங்கக் கூறின் இது பண்டைக் காலப் பண்பாட்டுக் கருவூலமாகவும், விளங்குகிறதெனலாம்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'

"எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே'

'இன்னா தம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்த்தோரே'

'செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே'

‘நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்'

முதலான புறநானூற்றுப் பகுதிகள் பண்டைத் தமிழரின் உயர்பண்பாட்டையும், ஒழுக்க நெறிகளையும் சிறந்து நாகரிகத்தையும் விளக்குவனவாகும்.

பரிபாடல்

இது பரந்து செல்லும் 'ஓசையுடைய ஒருவகை இசைப்