உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

இரவலனை வீடுபெற்றான் ஒருவன் முருகன்பால் ஆற்றுப் படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. ஏனைய ஆற்றுப்படைகள் எல்லாம் ஆற்றுப் படுத்துபவர் பெயரால் அமைந்திருக்க, இஃதொன்று மட்டும் பாட்டுடைத் தலைவன் பெயரால் அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்க தாகும்.

சங்க இலக்கியத்தில் வரும் பக்தி உணர்ச்சிகள் நிரம்பிய முழுப்பாடல் இஃதொன்றே எனலாம். அக்காலத்தில் இருந்த முருகன் திருக்கோயில்களைப் பற்றியும், வழிபாட்டு முறைகளைப் பற்றியும் இது குறிப்பிடுகிறது. இதில் அமைந்துள்ள இயற்கை வருணனைகள் உள்ளம் கவரும் தன்மையன.

இது முருகக் கடவுள் எழுந்தருளியிருக்கும் திருப்பரங்குன்றம் முதலாகிய ஆறுபடை வீடுகளைப் பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

முதற்பகுதியில் முருகக் கடவுளுடைய திருவுருவச் சிறப்பும், அவர் அணியும் மாலை விசேடங்களும், சூரர மகளிர் செயல்களும், முருகக் கடவுள் சூரனை வென்ற சிறப்பும், மதுரையின் பெருமையும், திருப்பரங்குன்றத்தின் இயற்கை வளமும் கூறப்படுகின்றன.

இரண்டாம் பகுதியில் முருகனின் ஆறு திருமுகங்கள் பற்றிய குறிப்புகளும், பன்னிரண்டு கைகளின் செயல்களும், திருச்சீரலைவாயில் அவர் எழுந்தருளியிருக்கும் நிலையும் கூறப்படுகின்றன.

மூன்றாம் பகுதியில் முருகனை வழிபடும் முனிவர்களின் ஒழுக்கமும், மகளிர் இயல்புகளும் கூறப்படுகின்றன.

நான்காம் பகுதியில் அந்தணர் இயல்பும், அவர்கள் முருகனை வழிபடும் இயல்பும் கூறப்படுகின்றன.