பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

கோடற் குவிமுகை அங்கை அவிழத்
தோடார் தோன்றி குருதி பூப்பக்
கானம் நந்திய செந்நிலப் பெருவழி'

என்னும் காட்டு வழியின் புனைந்துரை கற்பார் உள்ளத்தைக் கவர்கிறது. காயா கருநிறமாக மலர்கின்றனவாம்; கொன்றை நல்ல பொற்காசுகளைச் சொரிகின்றனவாம்; காந்தள் கை விரல்களை விரிக்கின்றனவாம்; தோன்றிப்பூ குருதியைப் பூக்கின்றனவாம். என்ன அழகு!

7. நெடுநல்வாடை

இது 188 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவால் அமைந்தது. பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியுள்ளார்.

கூதிர்ப்பருவம் இதில் அழகாகச் சித்திரிக்கப்படுகிறது. தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும் வேந்தனுக்குத் துணையாவி நல்வாடையாகவும் திகழ்தலால் இது நெடுநல்வாடை என வழங்குகிறது.

இஃது அகப் பொருளைப் பற்றியதாயினும் - வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம் (176) எனப் பாண்டியனது அடையாளப் பூக் குறிப்பிடப்படுவதால் இது புறத்திணையின் பாற்பட்டது.

இதில் கூதிர்க் காலத்தில் மக்களும் விலங்குகளும் பறவைகளும் குளிரால் நடுங்கும் நிலையும், அந்தப்புரத்தில் அரசி யாமத்தும் கட்டிற்கண் பிரிவுத்துயரால் உறக்கமின்றிக் கிடந்து வருந்தும் நிலையும், அதே சமயம் பாசறையில் வேந்தனும் உறங்குதலின்றிப் புண்பட்ட வீரர்களை நேரில் கண்டு ஆறுதல் கூறும் நிலையும் கூறப்படுகின்றன. ஒருபால் காதலும் மறுபால் கடமையும் சித்திரிக்கப்படுகின்றன.