பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

காஞ்சி, 17. ஏலாதி. 18. கைந்நிலை என்பன கீழ்க்கணக்கு நூல்களாகும்.

1. நாலடியார்

இது நான்கு அடிகளைக் கொண்ட நூல் என்ற பொருளில் நாலடியார் என வழங்குகிறது; சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். தொகுத்தவர் பதுமனார், பாடல்கள் வெண்பா யாப்பால் அமைந்தவை. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பகுப்புகள் இந்நூலில் உள்ளன.

'நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி'
'பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்'

போன்ற தொடர்கள் நாலடியாரின் சிறப்பினைக் கூறுவன' ஜி.யு. போப் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

இளமை நிலையாமையை முற்றியிருந்த கனியொழியத் தீவளியால், நற்காய் உதிர்தலும் உண்டு' எனவும், செல்வத்தைச் 'சகடக்கால்போல வரும்' எனவும், கல்லாதவர் ஆரவாரம் செய்தலை வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை ஒலி' எனவும். நெல்லுக்கு உமியுண்டு; நீருக்கு நுரையுண்டு; புல்லிதழ் பூவிற்கும். உண்டு, அதனால், நண்பர் குறையைப் பொறுத்தல் வேண்டும்' எனவும் நாலடியார் கூறுகிறது.

முத்திரையர் என்னும் குறுநில மன்னரைப் பற்றிய குறிப்பு இதன்கண் வருவதால் இந்நூல் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர்.

2. நான்மணிக்கடிகை

இதன் ஆசிரியர் விளம்பிநாகனார்; இது 104 பாடல்களைக் கொண்ட அறநூலாகும். ஒவ்வொரு பாடலும்