உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

பாடல்களாக ஐந்திணைக்கும் எழுபது பாடல்களைக் கொண்ட ஓர் அகப்பொருள் நூலாகும். காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு; கார் காலத்துத் தலைவனை நினைத்து நெஞ்சு உருகும் தலைவியின் நிலை ஒருபாடலில் அழகாகச் சித்திரிக்கப்படுகிறது.

‘இனத்த அருங்கலை பொங்கப் புனத்த
கொடி மயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி
யானு மவரும் வருந்தச் சிறுமா லை
தானும் புயலும் வரும்'


9. திணைமொழி ஐம்பது

இதன் ஆசிரியர் கண்ணன் சேந்தனார். காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு, 'யாழும் குழலும் இயைந்தென வீழும் அருவி' என அருவி பாராட்டப்படுகிறது.

தலைவியின் உறவினர் கடுஞ்சொல்லினர். வில்வினர்; வேலினர்; அம்பினர்; கல்லிடை வாழ்நர் என்று கூறி மலை விடை வாராதவாறு தலைவனைத் தடுக்கின்றாள் தோழி ஒருத்தி.

'விரைகமழ் சாரல் விளைபுனங் காப்பார்
வரையிடை வாரன்மின் ஐயா-உரைகடியர்
வில்வினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்
கல்லிடை வாழ்நர் எமர்'

10. திணைமாலை நூற்றைம்பது

இதன் ஆசிரியர் கணிமேதாவியார், இது திணைக்கு முப்பது பாடல்களாக நூற்றைம்பது பாடல்கள் கொண்டுள்ளது. காலம் கி பி. ஐந்தாம் நூற்றாண்டு; நெய்தல் நிலக் காட்சியும், தலைவன் வருகையும் கீழ்வரும் பாடலில் சித்திரிக்கப்படுகின்றன,