பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருட்பால்

இதன்கண் அரசர்க்கென அறிவுறுத்தும் நீதிகள் அனை வருக்குமே பொருந்துவனவாகும். அறிவு என்பதற்கு வள்ளுவர் தரும் விளக்கம் போற்றத் தக்கது.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப (து) அறிவு'

மருந்து என்னும் அதிகாரத்தில் மருத்துவம்பற்றி அவர் கூறும் கருத்துப் போற்றத்தக்க தாகும்.

‘நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்"

காமத்துப்பால்

இது கற்பனை நயம் மிக்கது. சங்க இலக்கிய மரபினின்று மாறுபட்டது. ஊடல் நுணுக்கங்கள் வள்ளுவரின் கற்பனைத் திறனைக் காட்டுகின்றன.

‘இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா
கண்ணிறை நீர் கொண்டனள்'

உரைகள்

தருமர், தாமத்தர், நச்சர், மல்லர், பரிதி, பரிப்பொருமாள், காளிங்கர், பரிமேலழகர், மணக்குடவர், திருமலையர் எனும் பதின்மர் திருக்குறளுக்கு உரைகண்டனர். பரிமேலழகர் உரையே தலை சிறந்ததாகும். திருக்குறளை வீரமாமுனிவர் இலத்தீனிலும், ஜீ. யு. போப் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்த்துள்ளனர். மேலும் பலர் பலமொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர். இன்று இந்து உலகப் பொதுமறையாகத் திகழ்கிறது.