உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

சிறப்பியல்புகள்

1. சிலம்பு சமண கருத்துகளைத் தெரிவித்தாலும் அச்சமயத்திற்கு முதலிடம் கொடுக்கவில்லை. சமயப் பொறையோடு பிற கடவுளரையும், பிற சமய வழிபாடுகளையும் கூறிச் செல்வதோடு அஃது எச்சமயத்தையும் இகழ்ந்து கூறவில்லை. மணிமேகலை முழுக்க முழுக்கப் பௌத்த காவியமாகவே திகழ்கிறது. பௌத்த மதக் கோட்பாடுகளைப் பரப்பவே இக்கதையை ஆசிரியர் பயன்படுத்துகிறார்.

2. இது சிலப்பதிகாரத்தைப் போல் முத்தமிழ்க் காப்பியமாகத் திகழாது. இயற்றமிழ்க் காப்பியமாகவே திகழ்கிறது.

3. இஃது இளமை, யாக்கை, செல்வம் இவற்றின் நிலையாமையை வற்புறுத்தி, அறம் செய்ய வேண்டியதன் இன்றியமையாமையை இயம்பி அற நூலாகவே திகழ்கிறது.

4. பசிப் பிணியை ஒழிக்க வேண்டும் என்பது இக்காவியத்தின் குறிக்கோளாகும்.

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

(காதை-11)

5. உண்மையான தொண்டு செய்வதற்குத் துறவு உள்ளம் வேண்டும் என்பதை வற்புறுத்தவே 'ஆபுத்திரன்' என்ற பாத்திரப் படைப்புச் சேர்க்கப்படுகிறது.

6. 'அட்சய பாத்திரம்' என்ற கற்பனை உலகப் பசியைப் போக்குவதற்குப் பொது நெறி ஒன்று வேண்டும் என்பதை உணர்த்த அமைந்ததாகும்.