பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

இவர் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களாகப் பாடியுள்ளமை போற்றதக்கது. அதிசயப் பத்து, அன்னைப்பத்து, ஆசைப்பத்து, அருட்பத்து, குயிற்பத்து முதலியன இத்தகையன.

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளம் தாழ் உறுபுனலின் கீழ்மேல் ஆப்
பதைத்துருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளந்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லால்
கண் இணையும் மரமாம்தீ வினையி னேற்கே'

இது பத்திச்சுவை நனிசொட்டும் பாடல் என்பதில் ஐயமில்லை.

மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார் 400 கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டது. இறைவனைத் தலைவனாகவும், ஆன்மாவைத் தலைவியாகவும் கொண்டு இது பாடப்பட்டது. இலக்கியக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் பொழுது இஃது ஒரு சுவைமிக்க நூலாகப் புலப்படும்.

பன்னிரு ஆழ்வார்கள்

திருமால்பால் கொண்ட பக்தி வெள்ளத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆழ்வார்கள் பன்னிருவராவர். அவர்தம் நூல்கள் இருபத்து நான்கு. பாடிய பாடல் ஏறத்தாழ நாலாயிரம். இவை நாலாயிர திவ்வியபிரபந்தம் என்ற