பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பெயரால் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. கி.பி.ஆறாம் நூற்றாண்டு தொடங்கி, ஒன்பதாம் நூற்றாண்டுக்குட்பட்ட முந்நூறு ஆண்டு காலத்தில இவ்வடியார்கள் திருப்பாசுரங்களைப் பாடித் தமிழையும் இறையுணர்வையும் ஒருங்கே வளர்த்துள்ளனர். இவர்கள் பாடல்கள் எளிமையும், இனிமையும் அழகும் பொலிந்து தமிழின் பெருமையை நிலை நாட்டி வருகின்றன. இவற்றைத் தொகுத்தவர் நாதமுனிகளாவார்.

1. பொய்கையாழ்வார்

இவர் காஞ்சியில் பிறந்தவர். சங்க காலப் பொய்கை யாழ்வார் இவரல்லர் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் எனும் மூவரையும் முதலாழ்வார்கள் என்பர். மூவரும் ஒருகால் தனித்தனியே திருக்கோவலூரை அடைந்து வைணவர் ஒருவர் வீட்டின் இடைக்கழியில் தங்கினர். ஒருவர் படுக்கவும், இருவர் இருக்கவும், மூவர் நிற்கவும் இருந்த அச்சிறிய இடத்தில் நாலாமவராக இறைவனும் வந்து புகுந்து நெருக்கிப் பின் தம் அருட் காட்சியினை அவர்களுக்கு அளித்தார்.

'வையந் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று'

இறைவனுக்குப் பாமாலை சூட்டிய நிலையினை இப்பாடலால் பொய்கையாழ்வார் உரைக்கின்றார். இவர் பாடிய 72 பாசுரங்களும் அந்தாதித் தொடையோடு வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.

2. பூதத்தாழ்வார்

இவர் கடன் மல்லை எனப்படும் மாமல்லபுரத்தில்