பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

கந்தபுராணம்

இதன் ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியார். இவர் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. முருகனுக்கும் சூரபதுமனுக்கும் நடந்த போர் இதில் விரித்துக் கூறப்படுகிறது. முருகன் வள்ளியையும், தெய்வயானையையும் மணந்த வரலாறுகளும் இடம் பெறுகின்றன. இந்நூல் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டது. வடமொழிஸ்காந்தத்தின் ஒரு பகுதியாகிய சங்கர சங்கிதை இதன் மூல நூலாகும்.

இலக்கண நூல்கள் (சோழர் காலம்)

சோழர் காலத்தில் காப்பியங்களோடு சிறந்த இலக்கண நூல்கள் பலவும் தோன்றின. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத் தக்கனவாகும்.

வீரசோழியம்

இதன் ஆசிரியர் புத்தமித்திரர்; காலம் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐந்தனுக்கும் இஃது இலக்கணம் கூறுகிறது: ஆசிரியர் தம்மை ஆதரித்த வீர சோழன் பெயரையே தம் நூலுக்கு வைத்துள்ளார்.

நேமிநாதம்

இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர்; காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. இஃது எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் கூறுகிறது. இதில் 96 நூற்பாக்களே உள்ளன. இந்நூல் மிகவும் சுருக்கமாக அமைந்தமையால் இதற்குச் ‘சின்னூல்’ என்ற பெயரும் வழங்குகிறது.

நன்னூல்

இதன் ஆசிரியர் பவணந்தியார்; காலம் பதின் மூன்றாம் நூற்றாண்டு, வீர சோழியத்தையும், தொல்காப்பியத்தையும் முதல் நூலாகக் கொண்டு இதன் ஆசிரியர் எழுதியுள்ளார்: