பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

அமையப்படுவது பிள்ளைத் தமிழ் எனப்படும். இஃது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில். சிறுபறை, சிறுதேர் என்பன பத்துப் பருவங்களாகும். இறுதி மூன்றனுக்குப் பதிலாகக் கழங்கு, அம்மானை, ஊசல் என்பன வந்து ஏனைய ஒத்து வருதல் பெண்பாற் பிள்ளைத் தமிழின் இலக்கணமாகும்.

ஒட்டக் கூத்தர் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழே இவ்வகையில் முதல் நூல் என்பர். அது சோழர் காலத்தைச் சார்ந்தது. குமர குருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமாாசாமிப் பிள்ளைத் தமிழ், பகழிக் கூத்தர் பாடிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் முதலியன பிள்ளைத் தமிழ் நூல்களுள் சிறந்தன என்பர் இவற்றுள்ளும் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே சிறந்ததென்பர் சிலர்.

பரணி

ஆயிரம் யானைகளை வீழ்த்தி வெற்றி கண்ட தலைவனைப் புகழ்ந்து பாடுவது பரணி என்னும் இலக்கியமாகும்.

"ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி"

செயங்கொண்டார் சோழவேந்தன் குலோத்துங்கன் மீது பாடிய கலிங்கத்துப் பரணி கற்பனை வளனும், ஓசை நலமும் கொண்டது; ஒட்டக்கூத்தர் தக்கயகப் பரணியைப் பாடியுள்ளார். இவை இரண்டும் சோழர் காலத்தில் தோன்றியவை.