பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

டக்தில் தங்கி, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகட்குமேல் தமிழ்ப்பணி ஆற்றினார். பல மேனாட்டு மொழிகளையும், தென்னக மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்து பெரும் புலமை பெற்றார். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் பெருநூலை இயற்றித் தமிழுக்குச் சிறந்த பெருமையைத் தேடித் தந்தார். 'திராவிட மொழிகளின் தனித் தன்மைகளைச் சுட்டி, அவற்றின் பெருமையை உலகறியச் செய்தார்; உலக மொழிகள் பலவற்றிலும் தமிழிச் சொற்கள் சென்று கலந்ததை எடுத்துக் காட்டினார்; 'திருநெல்வேலி சரித்திரம்' என்னும் அரிய வரலாற்று நூலையும் எழுதினார். இவ்விரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் அமைந்தவை. தாமரைத் தடாகம், நற்கருணைத்தியான மாலை முதலிய பல நூல்களை உரைநடையில் எழுதித் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குத் துணை செய்தார். தமிழுக்காகவும், கிறித்தவ சமயத்துக்காகவும் உழைத்த இவ் அறிஞர் பெருந்தகை தம் இறுதிக் காலத்தில் தாயகம் செல்ல மறுத்துக் கோடைக்கானலிலேயே உயிரிழத்தமையை நினைக்குங்கால், நெஞ்சம் நெகிழாமல் இருக்க முடியவில்லை.

முக்கூடற்பள்ளு

நாயக்கர் காலத்து எழுந்த இலக்கிய வகைகளுள் பள்ளு என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஃது உழவர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்க வல்லது. பள்ளு இலக்கியங்களுள் முக்கூடற்பள்ளு தலைசிறந்ததாகும். இதன் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

கடவுள் வணக்கம், பள்ளன் பெருமை, அவள் மனைவியர் உறவுகள், நாட்டு வளம், மழைக்குறி, ஆற்று வெள்ளம் முதலிய செய்திகள் இடம் பெறுகின்றன. பண்ணையாரிடம் பள்ளன் பேசும் உரையாடல்களும், அவன் தன் மனைவியரிடையே நிகழ்த்தும் ஊடற்செய்தி