பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

களும் நகைச்சுவை நல்குவன. நெல் வகைகளும், எருது வகைகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

இவர் திருவாவடுதுறை ஆதீனப் புலவராய் விளங்கினார். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர், தியாகராச செட்டியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலியோர் இவர் மரணவர்களுள் குறிப்பிடத் தக்கவராவர்,

முருகன் பிள்ளைத் தமிழ், அகிலாண்ட நாயகி மாலை, அம்பல வாணதேசிகர் கலம்பகம், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் முதலியன இவர் நூல்களுள் குறிப்பிடத்தக்கன. இவர் பாடல்கள் கம்பர் பாடல்களைப் போலக் கருத்துச் செறிவும், சொல்லின்பமும் வாய்ந்தவை. அதனால் இவர் நவீன கம்பர் எனப் போற்றப்படுகிறார். சேக்கிழார் பிள்ளைத் தமிழில் பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என்று சேக்கிழாரை இவர் பாராட்டுகிறார். உலா, கோவை, தூது முதலாய சிற்றிலக்கியங்களையும் இவர் மிகுதியாகப் படைத்துள்ளார். இவர் 1815 முதல் 1867 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

இராமலிங்க அடிகள்

தாயுமானவருக்குப் பிறகு சமரச சன்மார்க்க நெறிக்குப் புத்துணர்வூட்டிய பெருந்தகை இவரே. இறைவனை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து இவர் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. அவை அனைத்தும் திருவருட்பா எனும் பெயரில் வெளிவந்துள்ளன. அப்பாடல்கள் கற்பார் நெஞ்சினை உருக்கவல்லன. திருவாசகத்தில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. குவலயமெல்லாம் கொல்லாமையைக் கடைப்பிடித்தொழுக வேண்டும் என்பது இவரது உள்ளக் கிடக்கையாகும்.