பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

செய்து கொடுக்கவில்லை யென்றால் எத்துனையோ நூல்கள் செல்லுக்கும், பிற அழிவுக்கும் இரையாகி அழிந்திருக்கும். அதனால், இவர் தொண்டு அளப்பரிய தொன்றாகும். பதிப்புத் துறையில் இவருக்கிணையாவார் ஒருவரும் இலர். சிறந்த முன்னுரை, அரிய குறிப்புரை, சொற்பொருள், அகர வரிசை விளக்கம், நூலின்கண் இடம் பெற்ற அரசர், விலங்கு, புள், மரம் முதலியவற்றின் பெயர் முதலானவை இவர் பதிப்பின் முதற்கண் இடம் பெறும். பத்துப்பாட்டு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, பெருங்கதை முதலியன இவர் பதிப்பித்த நூல்களுள் குறிப்பிடத் தக்கனவாகும், பல சிற்றிலக்கிய நூல்களையும் இவர் பதிப்பித்துள்ளார். ‘என் வரலாறு’ எனும் தலைப்பில் தம் வரலாற்றை அழகாக வெளியிட்டுள்ளார்; நினைவு மஞ்சரி, புதியதும் பழையதும், சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும் முதலாய பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். இவர் 1885 முதல் 1942வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். வடமொழியிலும் தமிழிலும் புலமை மிக்கவர்; சுக்கிர நீதியும், மண்ணியல் சிறு தேரும் இவர் மொழி பெயர்த்த நூல்களாகும். உரை நடைக் கோவை, சுலோசனை, உதயணன் கதை முதலியவை இவர் இயற்றிய உரைநடை நூல்களாகும். மண்ணியல் சிறுதேர் என்பது கவிதைகள் இடையிட்ட உரைநடை நாடக நூலாகும். இஃது இவர் படைப்புகளுள் மிகச் சிறந்ததாகும். இவர் 1891 முதல் 1963 வரை வாழ்ந்தார்.