பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


சூத்திரதார்

திருவாளர் சாமி நாயுடு அவர்களின் நாடக சபையில் சில காலம் சுவாமிகள் ஆசிரியராக இருந்தார். அப்போது சூத்திரதாராகவும் நடித்து வந்தார். சுவாமிகள் சூத்திரதாராக வந்து நாடக நுணுக்கங்களைப் பற்றியும், நடைபெற விருக்கும் நாடகத்தின் நீதிகளைப் பற்றியும் நிகழ்த்தும் விரிவுரையைக் கேட்க மக்கள் ஆவலோடு கூடுவார்கள்.

ஆண்டிக் கோலம்

நாயுடு அவர்களின் குழுவில் இருந்தபோது சுவாமிகள் வாழ்க்கையில் வெறுப்புற்று தமது வழிபடு கடவுளாகிய முருகப் பெருமானின் திருவருளை வேண்டிக் கையில் ஐம்பது ரூபாய்களுடன் ஒரு நாள் ஆண்டிக் கோலத்தோடு தீர்த்த யாத்திரை செய்யப் புறப்பட்டு விட்டார். இவ்வாறு கோவணாண்டிக் கோலத்துடன் தலங்களைச் சுற்றி வந்தபோதுதான் எல்லோரும் அவரைச் சுவாமிகள் என்று அழைக்கத் தொடங்கினர்.

தத்து புத்திரர்

தீர்த்த யாத்திரை முடிந்ததும் சில ஆண்டுகள் புதுக்கோட்டை மகா வித்துவான் கஞ்சிரா மான் பூண்டியா பிள்ளை அவர்களுடன் சுவாமிகள் இருக்க நேரிட்டது.

புலவர்களால் மிகக் கடினம் என்று கருதப்பட்ட வண்ணம், சந்தம், இவற்றைப் பாடுவதில் சுவாமிகள் மிகவும் வல்லவராயிருந்தார். அவரது ‘சந்தக் குழிப்பு’ க்களிலே காணப்படும் தாள விந்தியாசங்களையும், சொற் சிலம்பங்களையும் பார்த்துப் பரவசமடைந்த மகா வித்துவான் மான் பூண்டியா பிள்ளை அவர்கள் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைத் தமது ‘தத்து புத்திரராக’ ஏற்றுக் கொண்டார்.