பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

கூறினார். அப்போது எனக்கு வயது ஏழு; என்றாலும் நன்றாக நினைவிருக்கிறது.

அன்று மாலை சுவாமிகள் புத்தகக் கடைக்குச் சென்று அபிமன்யுசுந்தரி அம்மானைப் பாடல் பிரதியொன்று வாங்கி வந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு ‘அரிக்கன்’ விளக்கை அருகில் வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினார். மறுநாள் பொழுது விடிந்து நாங்கள் எழுந்தபோது சுவாமிகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரது படுக்கையருகே அபிமன்யு நாடகம் மங்களப் பாட்டுடன் முடித்து வைக்கப்பட்டிருந்தது.

இது வெறும் கட்டுக் கதையன்று; உயர்வு நவிற்சியுமன்று. கண்கண்ட உண்மை. இச் சம்பவத்தை உடனிருந்து பார்த்த எங்கள் சக நடிகர்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர். திரு. பழனியா பிள்ளை அவர்கள் எல்லோரையும் அழைத்து அபிமன்யு நாடகத்தைக் காண்பித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள்!...அதற்கேற்ற உரையாடல்கள்! ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அடித்தல் திருத்தல் கிடையாது!...ஒரு புத்தகத்தைப் பார்த்து நகல் எடுக்கும் வேலையைக்கூட இவ்வளவு விரைவாகச் செய்ய முடியாது. கற்பனையாக நான்கு மணிநேரம் நடைபெறக் கூடிய ஒரு நாடகத்தையே எழுதி முடித்து விட்டார் சுவாமிகள். அவருடைய புலமைத் திறனை என்னென்று கூறுவது ?

“அடே சின்னப் பயலே! இந்த ‘அபிமன்யு’ நாடகம் உனக்காக எழுதப்பட்டது” என்று கூறிச் சுவாமிகள் அன்று என் முதுகிலே தட்டியபோது எனக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. இன்று அதை நினைத்துப் பூரிப்படைகிறேன்; பெருமிதங் கொள்கிறேன்.