பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


கோவலன் கதை நாடகமேடைக்கு வந்த வரலாறும் சுவாமிகளின் பெரும் புலமைத் திறனும் இவர்களுக்குத் தெரியாது. தமிழ்மொழியிலே உள்ள அடிப்படை நூல்கள் அத்தனையும் சுவாமிகளுக்கு மனப்பாடம். அவருடைய பாடல்களிலும் வசனங்களிலும் திருக்குறளும் நாலடியாரும் வாரி இறைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, குறுந்தொகை முதலிய சங்க நூல்களிலே புதைந்து கிடக்கும் சீரிய பேருண்மைகளெல்லாம் சுவாமிகளின் உரையாடல்களிலே எளிமையோடு வெளிவந்து உலாவுவதைக் காணலாம்.

மணிமேகலையைச் சிறிதும் மாற்றம் செய்யாமல் காப்பியப்படியே நாடகமாக்கித் தந்த சுவாமிகள், சிலப்பதிகாரக் கோவலனுக்கு வேறு வடிவம் கொடுத்திருப்பாரா என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாடகமேடைக் கோவலனை அந்தக் காலத்தில் பண்டிதர்களும் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். அவர்களில் எவரும் சிலப்பதிகாரத்தோடு நாடகக் கோவலனை இணைத்துப் பார்த்துக் குறைகூற முன் வரவில்லை.

அந்த நாளில் சுவாமிகள் இலங்கைக்குச் சென்றிருந்தபோது மாபெரும் புலவர்கள் நிறைந்த யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கத்தில் சுவாமிகளின் புலமையை ஆராயப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அக் கேள்விகளுக்கெல்லாம் மிக எளிதாகச் சுவாமிகள் விடையளிக்கவே, அவரது முத்தமிழ்ப் புலமையைப் பாராட்டிச் சங்கத்தார் வலம்புரிச் சங்கம் ஒன்றைப் பரிசாகத் தந்து சுவாமிகளைப் போற்றினார். இத்தகைய ஒரு பெரும் புலவர் மீது சிலப்பதிகாரத்தை அறியாதவர் என்ற