பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

மாறுபட்ட கருத்துடையவர். தமது பாடல் ஒன்றில் கூட பெயர் முத்திரை வைத்ததேயில்லை. பிற்காலத்தில் பெயர் விளங்குவதற்காகவாவது ஆசிரியன் பெயரைக் குறிப்பிட வேண்டியது அவசியமெனக் கவிராயர் அவர்கள் சுவாமிகளிடம் அடிக்கடி வற்புறுத்துவாராம். சுவாமிகள் இதற்கு அடியோடு மறுத்து விடவே கவிராயர் அவர்கள் தாம் எழுதிய இராமாயண நாடகப் பாடல்கள் சிலவற்றில், " முத்துச்சாமி சேர் சங்கரதாசர் ” என்று இருவர் பெயரையுமே ‘முத்திரை அடி’ யாக வைத்து விட்டார். இலங்கா தகனம் நாடகத்தில் ‘அனுமான்’ பாடும் சில பாடல்கள் இவ்வாறு இருவர் பெயரையும் தாங்கி நிற்கின்றன.

புலமை விளையாட்டு

ஒருமுறை கவிராயர் அவர்கள் சுவாமிகளை நோக்கி. “சங்கரதாஸ் சுவாமிகளே!” உம்முடைய பாடல்கள் முள்ளும் முரடும் போல் இருக்கின்றன” என்றாராம், உடனே சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “ “கவிராயர் பாடல்கள் கல்லும் கரடும் போல் இருக்கின்றனவே!” என்றாராம். புலவர்களின் விளையாட்டுப் பேச்சுக்களிலே கூட இனிமை சொட்டுவதைக் காண்கிறோம். முள்ளும் முரடும், கல்லும் கரடும் என்பவற்றை மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் முரட்டுத்தனமான பாடலென்றும் கடினமான பாடலென்றும்தான் பொருள் தோன்றும், ஆனால், உட்பொருள் அதுவன்று. முள்ளும் முரடும் போல் என்றால் பலாச் சுளையைப் போல் இனிக்கிறது என்றும், கல்லும் கரடும் போல் என்றால், கற்கண்டைப் போன்றது என்றும் பொருள் கொள்ளவேண்டும்.

இருவரும் பாடிய பரதன் பாட்டு

கவிராயர் அவர்கள் ஒரு நாள் இராமாயணப் பாடல்களைப் புனைந்து கொண்டிருந்தார். கேகய நாடு சென்-