பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

றிருந்த பரதன், தீய கனாக் கண்டு தம்பி சத்துருக்கனிடம் தான் கண்ட கனவைச் சொல்லுகிறான். பரதனுக்குப் பாடல் எழுதத் தொடங்கினார் கவிராயர் அவர்கள்.

நான் கண்டேன் பல தீங் கண்டும் கனவு
ஓங்கி எங்கெங்கும் உலகம்இருள

.........பாடல் தடைப்பட்டது. அடுத்த வரி பொருத்தமாக வராததால் வெளியே சென்று உலவிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கே வந்த சுவாமிகள் கவிராயர் எழுதியிருந்த பாடலைப் பார்த்துவிட்டு அதன் கீழே,

‘ஒலி இடியுடன் மலைகள் உருள’

என்றெழுதிப் பாடலின் அடுத்த அடியைப் பூர்த்திசெய்து விட்டு உள்ளே போய்விட்டார். கவிராயர் அவர்கள் தொடர்ந்து எழுதுவதற்காக விரைந்து வந்தவர் தமது பாடல் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதைக் கண்டதும், அவ்வாறு எழுதியவர் சுவாமிகள்தாம் என்பதை ஊகித்துக்கொண்டு, “எங்கே சங்கரதாஸ் சுவாமிகள்? வந்து எவ்வளவு நாழியாயிற்று?” என்று கேட்டாராம்.

உள்ளத் தொடர்பு

கவிராயர் அவர்களிடம் பாடம் கேட்கும் மாணாக்கர்கள் சுவாமிகளையும், சுவாமிகளிடம் பாடம் கேட்கும் மாணாக்கர்கள் கவிராயர் அவர்களையும் தங்கள் குருநாதராகவே எண்ணிப் போற்றுவது வழக்கம்.

கவிராயரவர்களின் மாணாக்கர்களில் ஒருவராகிய உடுமலை நாராயணக் கவி அவர்கள் சுவாமிகளிடமும் வெண்பா, கலித்துறை முதலியவற்றைப் பாடம் கேட்டாராம்.

சுவாமிகளின் மறைவைக் கேட்டுக் கவிராயர் அவர்களும் அவரது மாணாக்கர்களான திருவாளர்கள் சந்தான கிருஷ்ண நாயுடு, சங்கரலிங்கக் கவிராயர் முதலியோரும்