பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மன்னர் மீது புகழ்மாலை பாட மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் பலர் வந்து இதுபற்றி வற்புறுத்தியபோது சினங் கொண்டு, “மன்னனும் மறவன்; நானும் மறவன்; என்னைவிட மன்னன் எந்த வகையிலும் உயர்ந்தவனல்லன். எதற்காக நான் அவனைப் புகழ வேண்டும் ? மன்னன்மீது பாடினால் தான் எனது புலமை மன்னனுக்குப் புரியுமோ ?” என்று கூறிவிட்டார். சுவாமிகள் இறுதி வரையில் ‘நரஸ்துதி’ பாடவே யில்லை யென்பது குறிப்பிடத் தக்கது.

தமிழை விற்கச் சம்மதியேன்

சுவாமிகள் அவ்வப்போது எழுதிய பக்தி ரசப் பாடல்களை யெல்லாம் திரட்டி ஒரு சிறு நூலாக வெளியிடச் சில அச்சகத்தார் முயன்றனர். சுவாமிகளிடம் அனுமதி கேட்டபோது, “இலவசமாகக் கொடுப்பதானால் அச்சிட்டுக் கொள்ளுங்கள். தமிழை விலைக்கு விற்கச் சம்மதிக்க மாட்டேன்” என்று கூறி மறுத்து விட்டார்.

முடிவுரை

திறமை வாய்ந்த ஒரு பெரும் புலவரிடம் இத்தகைய நற்பண்புகளும் குடிகொண்டிருந்தமையால் தமிழ் நாடக உலகம் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றி வணங்குகிறது.

சுவாமிகள் மறைந்தார். அவரது பாடல்கள் என்றும் மறையா; அழியா. சுவாமிகளின் திருப்பெயர் தமிழ் உலகம் உள்ளவும் மங்காது நின்று ஒளி வீசுமாக !

வணக்கம் !