பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16令 தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

1950இல் இவருடைய முயற்சியால் தொடங்கப்பெற்ற நாடகக் கழகத்தின் முதல் தலைவராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளுக்கும் டில்லி, பம்பாய், கல்கத்தா, நாகபுரி, பெங்களூர், திருவனந்தபுரம் முதலிய வெளி மாநிலங்களுக்கும் தம் குழுவினருடன் சென்று நாடகங்கள் நடத்தியுள்ளார்.

    1960இல் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் ஒளவை சண்முகம் அவர்களுக்குச் சிறந்த தமிழ் நாடக நடிகர் என்ற விருது வழங்கியது. 1961இல் பண்டித மோதிலால் நேரு நூற்றாண்டு விழா சார்பில் புது டில்லியில் இவரது நாடகங்கள் நடைபெற்றபோது பண்டித நேரு அவற்றைப் பார்த்து மகிழ்ந்து பாராட்டி இருக்கிறார்
    1963 புதுடில்லி சங்கீத நாடக அகாடமி சண்முகம் அவர்களுக்கு இந்தியாவின் சிறந்த நாடக நடிகருக்கான விருது வழங்கிக் கெளரவித்தது
    1968இல் சென்னை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் 1971இல் இந்தியக் குடியரசுத் தலைவரால் பத்மஸ்ரீ பட்டம் பெற்றார் 'நாடகக் கலை' என்னும் நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி ஏ , பி எஸ் சி , ஆகிய வகுப்புகளுக்குத் துணைப் பாடநூலாக வைக்கப்படும் சிறப்புப் பெற்றது இவரது நாடகக் குழுவில் பணியாற்றிய அத்தனைப் பேர்களுக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், சரித்திரம் போன்ற பாடங்களுக்கு வகுப்புகள் எடுக்கச் செய்து, நாடகக் கலைஞர்களைப் படித்தவர்களாக மேம்படுத்தினார் இவரது நாடக வாழ்க்கை தமிழ் நாடக வரலாற்றில் ஒரு பொன் ஏடு என்று சொன்னால் மிகையாகாது