பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்


நோயும் சிகிச்சையும்

1921-ஆம் ஆண்டின் இறுதியில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையார் சென்னைக்குப் புறப்பட்டபோது சுவாமிகள் நோயுற்றதின் காரணமாகத் தூத்துக்குடிக்குச் சென்றார். சென்னையில் நாடகம் தொடங்கியதும் தூத்துக்குடியிலிருந்து வந்த செய்தி எங்களெல்லோரையும் திடுக்கிடச் செய்தது. 'சுவாமிகள் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டு வலது கால் வலது கை முடக்கப்பட்டு வாயும் பேச முடியாத நிலையில் படுக்கையில் இருக்கிறார்' என்றறிந்ததும் எல்லோரும் கண்ணீர் விட்டனர்.

கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான திருவாளர் பழனியா பிள்ளை அவர்கள் சுவாமிகளைச் சென்னைக்கே அழைத்து வந்து சிகிச்சை செய்ய முனைந்தார். மருத்துவர்கள் பலர் வந்து பார்த்தனர். எவ்வித முயற்சியும் பயனளிக்கவில்லை.

இந்த நிலையிலிருந்தபோதும் சுவாமிகள் நாடகப் பணியிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்ளவில்லை. நாடக அரங்கிற்கு வந்து திரை மறைவில் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்தவாறே அவ்வப்போது கைகளால் சைகை காட்டித் தமது ஆசிரியப் பொறுப்பை நிறைவேற்றி வந்தார்.