பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40* தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

சுந்தரியை அபிமன்யுவுக்குக் கொடுக்க மறுத்து, துரியோதனன் மகன் இலக்கணகுமாரனுக்கு மண முடிக்கச் சகல ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. மணமகன் தனது பரிவாரங்களுடன் வந்துவிட்டான். மங்கல வாத்தியங்கள் முழங்குகின்றன. இன்னும் சிறிது நேரத்தில் மணப்பெண்ணை அழைத்துப் போக வந்துவிடுவார்கள். இந்த மனமற்ற மணத்திற்காக நடக்கும் மேளதாள ஒலிகளைக் கேட்டுச்சுந்தரி உடல் நடுங்குகிறாள்; கண்ணிர் விடுகிறாள். இசைக் கருவிகளின் முழக்கம் அவள் இதயத்தில் அடிப்பது போலிருக்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் வழக்கம்போல் சுந்தரிக்கு மலர்கள் கொண்டு வந்த ஒரு பாட்டியின்மூலம் அத்தான் அபிமன்யு வந்து விட்ட சேதி தெரிகிறது. பூச்செண்டுக்குள் காதலன் வைத்தனுப்பிய கணையாழியும் ஓலையும் அவள் கையில் கிடைக்கின்றன. ஆனந்தக் கண்ணிர் வடிக்கிறாள் சுந்தரி. முன்பு இதயத்தைத் தாக்கித் துன்பத்தைத் தந்த அதே மேளவாத்திய ஒலிகள் இப்போது அவர் இதயத்தை மகிழ்விக்கின்றன. வசனத்தைப் படியுங்கள். சுந்தரியின் வாயிலாகச் சுவாமிகளின்புலமை வெளிப்படுகின்றது.

"தோழி! என்ன அதிசயமடீ! சற்று நேரத்திற்கு முன்அந்த முட்டாள் இலக்கணனுக்கு நான் மனைவி யாகப் போவதை அறிவித்து என் இதயத்தைத் துன்புறுத்திய அதே மேளதாள வாத்திய ஒலி