பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xv

பாடலின் சிறப்பை இவ்வளவு ஆழமாகக் கூறமுடியும் என்று தோன்றுகிறது. பல பாடல்களைக் கம்பனின் சந்தங்களோடு ஒப்பிட்டுச் சொல்லும்போது சுவாமிகளின் தமிழாற்றலை நினைத்து வியக்கத் தோன்றுகிறது.

திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட சுவாமிகள் அதனை நீதிவசனம், வேதமொழி என்றெல்லாம் மிக அருமையாகக் குறிப்பிடுகிறார். எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்துகிறார் என்பதைக் குறிப்பிடும் நம் அ.ச.ஞா. அதற்குச் சில எடுத்துக்காட்டுகளும் காண்பிக்கிறார்.

அவாவே பிறப்பினும் பித்தென்று வள்ளுவர்
ஆராய்ந்து சொல்லினர் அன்றோ?
பற்றற்றான் பற்றினைப் பற்றென்று சொன்னதும்
பாவனை உண்மையின் மார்க்கம்

சுவாமிகளிடமிருந்த நகைச்சுவை உணர்வு, நிந்தாஸ்துதியாகப் பாடும் கவிநயம், பொருத்தமான இடத்தில் பழமொழிகளைப் பயன்படுத்தும் சாதுர்யம், பழைய இலக்கியங்களில் இருந்த ஆழ்ந்த பயிற்சி, சைவசித்தாந்த ஈடுபாடு அனைத்தையும் தனித்தனியே பட்டியலிட்டுக் காட்டியிருக்கும் அ.ச. ஞானசம்பந்தனாரின் ஆய்வுச் சொற்பொழிவுகள் சுவாமிகளின் பெயரை என்றென்றும் நிலைநிறுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. வாழ்க சங்கரதாஸ் சுவாமிகள் புகழ்! வாழ்க அ.ச. ஞானசம்பந்தனாரின் அரிய ஆய்வு!

அன்பு

ஆர்.எஸ். மனோகர்.