பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4 ❖ அ.ச. ஞானசம்பந்தன்



அவருடைய தீர்க்க தரிசனத்தை என்னென்று கூறுவது?

பெண்கள் என்பவர்கள், வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதப்பெற்ற போலி வேதாந்த காலத்தில் வாழ்ந்த இத்தமிழ்த் துறவியார் 20-ஆம் நூற்றாண்டு பிறக்குமுன்னரே நெஞ்சுத் துணிவுடன் பல மகளிரையும் நாடகக் கலைக்குப் பழக்கிவிட்டார் என்றால், அவர் சிறப்பும் நெஞ்சுரமும் தீர்க்க தரிசனமும் தனிச்சிறப்புப் பெற்றவையாகும்.

சுவாமிகள் தமிழுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தால், ஏனைய இயலையும் இசையையும் விட்டுவிட்டு நாடகத்தமிழை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும், என்ற வினாத் தோன்றினால் தவறு இல்லை. ஆனால், அவர்களின் காலம் இயற்றமிழில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்ற பேரறிஞர்கள் வாழ்ந்த காலமாகும். இசைத்தமிழை வளர்க்கச் சிறந்த இசைக் கலைவாணர்களும் கீர்த்தனம் பல பாடிய கோபால கிருஷ்ணபாரதியாரும் இருந்த காலமாகும். ஆனால், தமிழ் நாடகம் சீர்கெட்டுப் போயிருந்ததோடல்லாமல், அதனை எடுத்துப் போற்றுபவர்களையும் அன்றைய சமுதாயம் சந்தேகக் கண்கொண்டே பார்த்து வந்தது. சுவாமிகள் இயற்றிய 'வெள்ளை வாணி' (இன்கவித்திரட்டு - 7) என்ற பாடலில் கீழ் வருமாறு பாடுகிறார்:-