பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அ.ச. ஞானசம்பந்தன்



போக்கு, பொருள், வருவாய், புகழ் என்ற மூன்றுக்கும் சுவாமிகள் மயங்கவில்லை; கவலைப்படவுமில்லை. வேறு எக்காரணத்தால் துணிந்து இச்செயலில் இறங்கினார்? தம் உள்ளுணர்வு, இதனையே கடமையாகக் கொண்டு தொழிற்பட வேண்டும் என்று இட்ட கட்டளையை, இறைவன் கட்டளையாகவே கொண்டு சுவாமிகள் நாடகாசிரியராக முகிழ்த்தார். இத்தகைய ஒரு பெரியாருக்குத் தந்தையும் மைந்தர்களுமாகச் சீடராய் அமர்ந்திருக்கும் பேறு பெற்றவர்கள் முறையே திரு கண்ணுச்சாமி பிள்ளையும் அவருடைய மைந்தர்களுமாவர்.

சுவாமிகள் தந்நலங்கருதாது இப்பணியில் ஈடுபட்டமையால்தான், அவர் சீடர்கள் அவரை இன்று மறவாமல் போற்றுகின்றனர். அச்சீடருள் தலையாய திரு ஒளவை டி.கே. சண்முகமவர்கள், சுவாமிகள் பெயரில் ஒர் அறக்கட்டளையை நிறுவி ஆண்டுதோறும் இரு தொடர் சொற்பொழிவுகள் நிகழுமாறு ஏற்பாடு செய்துள்ளார். அவருக்கு நம்வாழ்த்தும், சுவாமிகளின் ஆசியும் கிடைப்பதாக!

சுவாமிகள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்த்த தமிழ் நாடகத்தின் வரலாற்றை ஒருவாறு அறியப் புகுவதே இன்றைய சொற்பொழிவின் நோக்கமாகும். தொன்மை மிக்க காலத்தில் சிறப்புற்று விளங்கிய 'கூத்துப்' பற்றிச் சங்க நூல்கள் குறிப்பிடும் விறலியர், மெய்ப்பாடு தோன்ற இக்கூத்து வகை ஆடல்களில் வல்லவராகத் திகழ்ந்தனர். 'நனவுப் புகு விறலி' என்று கபிலர் இதனைக் குறிப்பிடக் காண்கிறோம்.

தமிழ் மொழிக்கு அற்றை நாளில் வரம்பு வகுத்த தொல்காப்பியனார் நாடக வழக்கு என்ற சொல்லை மிகச் சிறந்த முறையில் கையாள்கிறார்.