பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அ.ச. ஞானசம்பந்தன்



வழக்கு, கற்பனை இரண்டும் கலந்தே நாடகம் அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைக்கப் பெற்ற நாடகம் பெரும் பகுதி செய்யுள் வடிவிலேயே இருந்தது என்பதும் அச்செய்யுளும் சான்றோர் செய்யுள் போல இல்லாமல், அனைவரும் அறிந்து அனுபவிக்கும் வகையில் பாட்டும் உரையாடலும் கலந்து அமைக்கப் பெற்றது என்பதும் இச்சூத்திரத்தால் அறியப்படும்.

எல்லா மாந்தரும் அறிந்து அனுபவிக்கும் முறையில், பழங்கதை தழுவிப் பாட்டுடன் கலந்து வருவதைத் தொல்காப்பியனார் 'பண்ணத்தி' என்று வழங்கினர் போலும். 'பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே’ என்றதால், பண்ணத்தி முழுத் தன்மை பெற்ற பாட்டு அன்று என்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி முதலிய பாவகையுள் நாடகப் பாடலாகிய பண்ணத்தி சேராது என்பதும் புலனாகின்றன. அவ்வாறாயின் அதனைப் பாடல் அன்று என்றும் ஒதுக்கக் கூடாது என்பதற்கு ‘பாட்டின் இயல’ என்றுங் கூறிச் சென்றுள்ளார். இற்றை நாள் நாடகங்களில் வரும் கீர்த்தனை முதலிய போல அற்றை நாள் பண்ணத்தி இருந்தது போலும். இதனை அடுத்துவரும் சூத்திரம் சிறிது ஆயத் தகுந்தது.

அதுவே தானும் பிசியொடு மானும்
(தொல்:பொருள்: செய்-181)

‘பண்ணத்தி என்பது பிசிபோன்றதாம்' என்பதே இச்சூத்திரப் பொருள். அவ்வாறாயின் 'பிசி' என்பது பற்றித் தொல்காப்பியனார் கூறுவதை ஆய்தல் இதனை மேலும் தெளிவுறுத்தும்.