பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

15



லிருந்து அவற்றை வேறுபடுத்திக் காட்டவே 174ஆம் சூத்திரம் தோன்றிற்று. 175-ஆம் சூத்திரம் அந்நாடகத்துள் நகைமொழி செவிலி கூற்றாக வரும் என்று கூறுகிறது.

தொல்காப்பியர் காலத்தை அடுத்துத் தோன்றிய அகத்துறைப் பாடல்கள் பாடியவர்கள் நாடகத் தனி மொழியாக அமையும் பொழுது நகைச்சுவை தேவைப்பட்ட இடங்களில் இவ்விலக்கணத்தை ஒட்டியே நகை மொழியைத் தோழி கூற்றாக அமைத்து விட்டனர் போலும்.

இவ்வாறு இம்மூன்று சூத்திரங்கட்கும் பொருள் கொண்டால் 176-ஆம் சூத்திரமாகிய பிசி பற்றிய சூத்திரத்திற்கு நேரிதாகப் பொருள் கொள்ள முடிகிறது. இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு 176-வது சூத்திரத்தை மறுபடியும் காண்போம்.

ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும்
தோன்றுவது கிளந்த துணிவினானும்
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே
(செ176)

ஒப்பொடு புணர்ந்த உவமம் என்பது வேடம் அணிதலைக் குறிக்காதா என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒருவன் எந்தப் பாத்திரத்தை ஏற்கின்றானோ அந்தப் பாத்திரத்தோடு ஒப்புமை கூறத் தக்க வகையில் வேடம் அணியப் பட வேண்டும். அரசனாக வேடமணிந்தால் பார்த்த மாத்திரத்தில் இவன் அரசன் என்றும் சேவகன் வேடமோ, அமைச்சன் வேடமோ, கள்வன் வேடமோ அணிந்தால் பார்த்த மாத்திரத்தே இவன் சேவகன் அல்லது அமைச்சன் அல்லது