பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

27



வழக்கினுள் நூல் செய்வான் பாடலில் இம்மெய்ப்பாடு வேண்டப் படுவதும் உண்டாதலின் அதற்கு இடம் கொடுத்தார் என்றாகிறது. ஒப்பற்ற உரையாசிரியராகிய பேராசிரியர்க்கு இத்தகைய குழப்பம் தோன்றக் காரணம் யாது? ஒர் இயலையே (மெய்ப்பாட்டியல்) பிறன்கோட் கூறல் என்னும் உத்தியால் தொல்காப்பியனார் கூறினார் என்று கூற வேண்டிய நிலை ஏன் வந்தது? ஒரு தனி நூற்பா, அல்லது ஒரு தனிக் கருத்தை அவ்வாறு கூறல் உண்டு. ஆனால் ஒர் இயல் முழுவதையும் இவ்வாறு பிறன்கோட் கூறல் என்ற உத்தியில் கடக்க நேர்ந்த காரணம் யாது?

இடைக் காலத்தில் எழுந்த சமயப் போராட்டத்தின் முடிவில் ஜைனக் கொள்கைகள் சில இந்நாட்டில் ஆழப் பதிந்துவிட்டன. அவற்றுள் ஒன்று பொறிகளால் அனுபவிக்கப்படும் நாடகம், இசை முதலியவை தாழ்ந்தவை; விலக்கப்பட வேண்டியவை என்ற ஒரு பிழைபட்ட கருத்தாகும். அந்தச் சிக்கலிற் சிக்கிய உரையாசிரியர்கள் அனைவரும் தொல்காப்பியனார் நாடகத்தையும் ஏற்றுக்கொண்டார் என்று கூறத் துணியவில்லை. அதனாலேயே போலும் மெய்ப்பாட்டியல் போன்ற இயல்கட்கு உரை காண்பதில் இடர்ப்பட்டனர். மெய்ப்பாடு என்பது முதலில் நாடகத்திற்கே உரியதாய் இருந்தது. நாளாவட்டத்தில் கவிதையிலும் இடம் பெறுவதாயிற்று. மெய்ப்பாடு என்பது உணர்ச்சியின் வெளிப்பாடாகும். உள்ளத்தில் அனுபவிக்கப்படும் சுவையை வெளியே காட்டும் இயல்புதானே மெய்ப்பாடெனப்பட்டது? எனவே நாடகத்தில் பங்கு பெறும் பாத்திரம் தன்