பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

29



கவிதையிற் கூறப்படும் பொருள் ஆழ்ந்து ஆயப்படாமலும் கேட்ட மாத்திரையே அது கூற முற்படும் சுவைக்கேற்ற மெய்ப்பாடுகளைக் கற்பாரிடம் ஏற்படுத்தும் முறையில் செய்யப்பட வேண்டும் கவிதை என்பது முதல் நூற்பாவின் பொருளாம். இங்குக் கூறப்பட்ட மெய்ப்பாடுகள் முன்னர் மெய்ப்பாட்டியலிற் கூறப் பெற்றனவே தவிர வேறு அல்ல என்பதே இரண்டாம் நூற்பாவின் பொருளாம்.

அவ்வாறானால் மெய்ப்பாட்டியலில் விரித்துக் கூறப் பெற்ற மெய்ப்பாடுகள் நாடகத்திற்கும் பாடலுக்கும் பொது என்பதையும் கவிதைக்கு வேண்டப் பெற்ற ஒரு சில மாற்றங்களோடு மெய்ப்பாட்டியல் கூறப் பெற்றுள்ளது என்பதையும் ஆசிரியர் நன்கு விளக்கி விட்டார். அவ்வாறு இருக்கவும், உரையாசிரியர் இது பிறன் கோட் கூறல் என்னும் உத்தி என்று கூறி அவதிப்பட வேண்டிய காரணம் யாது?

தேவையான மாறுபாடுகளைத் தொல்காப்பியனார் கூறியுள்ளார் என்பதை அவர் மெய்ப்பாட்டியலின் முதல் நூற்பாவில் 32 என்று எண் கொடுத்தமையாலேயே அறியலாம். தொல்காப்பியனார் கருத்துப்படி எட்டுச் சுவைகள் உள. அவை

நகையே, அழுகை, இளிவரல் மருட்கை
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
(தொல்:பொருள்:மெய்-3)

என்ற எட்டுமாம் என ஆசிரியர் வகுத்துரைக்கின்றார். இனி இந்த ஒவ்வொரு சுவையும் தோன்ற வேண்டுமாயின் அதற்கு என்ன என்ன தேவைப்படுகின்றன.