பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அ.ச. ஞானசம்பந்தன்



இவ்வாறு திரையமைப்புச் செய்து 2000 ஆண்டு களின் முன்னர், தமிழர் நாடக மேடை அமைத்திருந்தனர் என்பதை அறிய மனம் பூரிப்படையாமல் இருத்தல் இயலாது. இதில் வியக்கத்தக்க ஒன்றையுங் காண்டல் வேண்டும். முந்நூறு ஆண்டுகளின் முன்னர், உலகம் புகழும் நாடகங்கள் எழுதிய ஷேக்ஸ்பியர் காலத்திய அரங்குகளிற் கூடக் கரந்துவரல் எழினி என்று கூறப் பெறும் திரை கிடையாது. எனவே அவல நாடகங்களில் கொலை நிகழ்ச்சி காட்டப் பெற்றால், அக்காட்சியின் இறுதியில் ஒரு பாத்திரம் வெட்டுண்டவனைத் தூக்கிச் செல்வதாகவே அவருடைய நாடகங்களில் எழுதப் பெற்றுள்ளது. நானூறு ஆண்டுகட்கு முன்னர் கூடக் கரந்துவரல் எழினி என்றும் மூடு திரை இல்லாத நாடக மன்றங்கள் பெற்றிருந்த இங்கிலாந்து நாட்டுடன் இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னரே கரந்துவரல் எழினியாம் மூடும் திரையுடன் இருந்த தமிழ் நாடக மேடை ஒப்பிட்டு ஆராயத்தக்கது.

இதனை அடுத்து நாம் நாடகம் பற்றிய குறிப்பைக் கேட்பது சிந்தாமணியிலாகும். திருவள்ளுவர் ‘கூத்தாட்டவைக் குழாம்' (குறள்:332) பற்றிக் குறிப்பிடுகிறார்; பட்டினப்பாலையில் கண்ணனார், “பாடல் ஒர்த்தும் நாடகம் நயந்தும்” (பட்டி 113) என்று மக்கள் நாடகங் கண்டு களிப்பதைக் கூறுகிறார். இவ்வழக்காறு சிந்தாமணி ஆசிரியர் காலம் வரை சிறப்புற்றுத் திகழ்ந்ததென்பதை, இக்காப்பியத்தால் அறிகிறோம். பதுமையார் இலம்பகத்தில் 'நாறியுஞ் சுவைத்தும் நரம்பின் இசை கூறியும் குளிர் நாடகம் நோக்கியும்' (சீவகசிந்:1351) என வரும் அடியே இதற்கு சான்றாகும்.