பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

41



எழுதப் பெற்றது என்று கூறுவதைக் காட்டிலும் படிப்பதற்கென்றே எழுதப் பெற்றது என்று கூறுவது நலம். பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரிகள்) 'நாடக இயல்' என்ற நாடக இலக்கண நூல் ஒன்றைச் சென்ற நூற்றாண்டில் ஆக்கித் தந்தார். வடமொழி நாடகம் ஆங்கில நாடகவியல் இவை இரண்டிலும் இருக்கும் சிறந்த பகுதிகளைத் திரட்டித் தமிழ் நாடகத்திற்கென்று ஆக்கித் தந்த இலக்கண நூலாகும் 'நாடக இயல்'. ஆனால் பரிதிமாற் கலைஞர் இத்தகைய ஒர் இலக்கண நூலை ஆக்குங் காலத்திலேயே தமிழ் நாடகம் மீண்டும் ஒரு புதிய சகாப்தத்தில் புகுந்து விட்டது. நொண்டி நாடகம், விலாசம், நாடகம், முதலிய பெயர்களில் புகுந்து, நாடகம் சமுதாய அடிப்படையில் வளரத் தொடங்கி விட்டது. அன்று வரை நடைபெற்று வந்த புராண இதிகாச நாடகங்கள் மெள்ள மெள்ளத் தம் செல்வாக்கை இழந்து விட்டன. புதிய உத்திகளைக் கையாண்டு நாடகங்கள் வரத் தொடங்கின.

ஆயினும் பல்லாண்டு காலமாக மக்கள் மனத்தில் ஓர் இடம் பிடித்து வந்திருந்த புராண நாடகங்களும் அவ்வப்பொழுது தலை தூக்காமல் போகவில்லை. புராண நாடகங்கள் என்று கூறப் பெறினும் அவற்றை எழுதுவார் கற்பனைத் திறனுக்கு ஏற்ப, இவை ஒவ்வொருவர் கையிலும் ஒரளவு மாற்றம் பெற்றன. ஒரே வள்ளி திருமணத்தை இருவேறு ஆசிரியர்கள் எழுதினால், இருவேறு வள்ளி திருமணங்களாக அவை அமையலாயின.