பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48அ.ச. ஞானசம்பந்தன்


உண்டாக்கினாலும் ஆழ்ந்த சிந்தனையின்மேல் அமைக்கப்படவேண்டும்.

முடிவாகக் கூறுமிடத்து, இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியாகிய இந்நாளில் தமிழ் நாடகம் வளர்ந்திருக்கிறது என்று திடமாகக் கூறமுடியவில்லை. முன்னைய நிலையைவிட இன்று நாடகக் குழுக்கள் அதிகம் உண்டு; அநேக நாடகங்கள் நடைபெறுகின்றன; மிகுதியான மக்கள் நாடகங்களைக் கண்டுகளிக்கின்றனர்; ஏராளமான நாடகங்கள் எழுதப்பெறுகின்றன. ஆயினும் ஏனைய இயல், இசைப் பகுதிகள் வளர்ச்சியுற்றிருப்பதுபோல நாடகத் துறை வளர்ந்திருக்கிறது என்று கூறிவிடமுடியாது. மேலும் சினிமாக்கலை நாடகக் கலையை ஓரளவு நசிக்கச்செய்துவிட்டது என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய உண்மையாகும். இடைக் காலத்தில் சமண சமயத்தினர் நாடகம் சிற்றின்பம் தருவதெனப் புறக் கணித்தமையால் நாடகம் பெரிதும் வளர்ச்சி குன்றியதென்பதும் இவண் குறிப்பிடத்தக்கதாகும். அன்றியும் நாடகக்கலை அரசர் போன்றவர்களின் பராமரிப்பில் வளர்கின்ற ஒரு நுண்கலை. எல்லாரும் இந்நாட்டு மன்னராகிவிட்டனர் இந்நாளில். எனவே அவர்கள் வசதிக்கேற்ற முறையில் சினிமாக் கலை வளர்க்கப்படுகிறது. நடிப்பு என்ற சொல்லின் பொருளையே அறியாமற்கூட ஒருவர் முகவெட்டு, குரல் என்பவற்றின் துணைகொண்டு நடிகராகிவிடும் நிலைமை இன்று இருந்து வருகிறது.