பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாடகாசிரியர்
சங்கரதாச சுவாமிகள்

சென்ற பகுதியில் தமிழ் நாடகத்தின் வளர்ச்சியை ஒருவாறு கண்டோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாடகம் அத்துணை வளம் பெற்று நிற்கவில்லை எனவும், ‘விலாசம்’ நாடகம், கூத்து என்ற பெயர்களில் பழைய கதை தழுவிய சில நாடகங்கள் மட்டுமே இருந்தன எனவுங்கண்டோம். சங்க காலத்தில் நாடகங்களில் ‘பண்ணத்தி’ என்ற பெயருடன் பல்வேறு பாடல் வகைகள் இடம்பெற்றன என்பதும் முன்னர்க் குறிப்பிடப்பெற்றது. அவ்வகையை விரிவுபடுத்தும் முறையில் சீர்காழி அருணாசலக்கவியின் இராமநாடகக் கீர்த்தனைகள் தோன்றின. 1712 முதல் 1799 வரை வாழ்ந்த இவர், இலக்கிய அறிவு நிரம்பப் பெற்றவராய் இருந்தமையின் இவருடைய கீர்த்தனைகள், ஆழ்ந்த புலமை நலத்தையும் இவருடைய இசைச் சிறப்பையும் காட்டுவனவாய் அமைந்துள்ளன. இவருக்குப் பிறகு, இலக்கியப் பயிற்சியுடன் நாடகம் எழுதிய பெருமை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அவர்கட்கே உரியது என்று கூறினால் மிகையாகாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான நாடகங்கள் எழுதப்பெற்றிருப்பினும் அவற்றுள் ஒருசில போக எஞ்சியவை அனைத்தும் பழைய கதை தழுவியனவேயாகும். ஆதிநாராயணையர் என்பவர் 1896இல் வெளியிட்ட ‘ஜனமனோல்லாசினி’, திருச்செந்தூர் ஒளிமுத்து சுப்பிரமணியபிள்ளை எழுதிய