பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அ.ச. ஞானசம்பந்தன்



முதிர்ந்தவர்கள் என்பதையும் நினைவிற் கொண்டும் நாடகாசிரியர் நாடகத்தை அமைக்க வேண்டும்.

இந்தச் சோதனையில் சுவாமிகள் முழு வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறல் வேண்டும். ஒரோர் இடங்களில் உரையாடலும் பாடலும் இந்நாளையச் சிறார்கள் வாயில் புகுந்து வெளிப்பட முடியாத அளவு கடினமான தமிழ், வடசொற்களைக் கொண்டு விளங்குவதைக் கண்டு யானும் மலைத்ததுண்டு. ஆனால் அதனை அடுத்து, சுவாமிகள் குறிப்பிட்ட ஒரு சிறுவனை மனத்தில் வைத்துக்கொண்டே இந்நாடகத்தை எழுதினார் என்ற வரலாற்றுண்மை தெரிந்தவுடன் என் மலைப்பு மறைந்து விட்டது. சுவாமிகள் எந்தச் சிறுவனை மனத்துள் வைத்துக் கொண்டு இந்த உரையாடலை எழுதினாரோ, அந்தச் சிறுவன் எத்தகைய உரையாடலையும் தங்கு தடையின்றிப் பேசக் கூடிய பேராற்றல் படைத்தவனாவான்.

இத்தகைய ஆற்றல் அந்தச் சிறுவனிடம் அன்றே விளங்கியதைத் தம் கூர்த்த மதி கொண்டு அறிந்து சுவாமிகள் அபிமன்யு நாடக உரையாடலை அமைத்தார். அந்தச் சிறுவன் பெரியவராகிய பொழுது அவருடைய ஆற்றலை மனத்துட் கொண்டே பல நாடகாசிரியர்களும் நாடகங்களை அமைத்தனர் என்று கருதுகிறேன். ஏன் என்றால் இன்று உங்களிடையே பேசிக் கொண்டிருக்கும் நானும், சுவாமிகள் எந்தச் சிறுவனை மனத்துட் கொண்டு நாடகம் எழுதினாரோ, அந்தச் சிறுவன் பெரியவராகிய நிலையில் அவரையே மனத்துட் கொண்டு ஒரு நாடகம் எழுதினேன். அந்தப் பெரியவர் யாரென்று நீங்கள் ஊகித்து விட்டீர்கள் அல்லவா? ஆம்! உங்கள் ஊகம் சரியே! அவர் தாம்