பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

61



என்ற நூற்பாவும் அதற்குப் பேராசிரியர் கூறிய உரையுங் கொண்டு பார்த்தால் கலி, பரிபாடல் என்ற பாவகையிலேயே அகப் பொருள் பற்றிய பாடல்கள் பாடப்படும் என்றறிகிறோம். ஆனால் இன்றுள்ள சங்கப் பாடல்களுள் கலித் தொகை தவிர ஏனைய அக நானூறு, நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறு நூறு நான்கும் ஆசிரியப் பாவால் இயன்றவையேயாகும். இன்று நமக்குக் கிடைக்கும் பரிபாடல் பெரிதும் காமங் கண்ணிய நூல் என்று கூறுதற்கு ஏலாத முறையில் முருகன், திருமால், வையை என்பவை பற்றிப் பாடப்பட்டுள்ளது. இவற்றுள் வையை பற்றிய பாடல்களில் காமம் பற்றிய கற்பனைகள் மிகுதியாக உள. ஏனைய கடவுள் வணக்கப் பாடல்களிலும் (செவ்வேள்) காமங் கண்ணிய பகுதிகள் மிக அருகியே இடம் பெற்றுள்ளன. எனவே தொல்காப்பியம் சங்கப் பாடல்கள் பலவற்றுக்கும் முற்பட்டது என்பது விளங்கும்.

தொன்மை மிக்க தொல்காப்பியம் கூறிய நால்வகை உரை நடை நூல்களுள் ஒன்று கூட இன்று இல்லாமற் போனதேன்? ஏடுகளில் எழுதி வந்த காலத்தில் பெரும்பான்மையான நூல்களை மனப்பாடம் செய்வதனாலேயே காப்பாற்றி வந்தனர் என்று நினைக்க வேண்டியுள்ளது. அவ்வாறு மனப்பாடம் செய்ய வேண்டுமானால் உரை நடையைவிடப் பாடல்களே எளிமையானவை என்பது சொல்ல வேண்டியதில்லை. இறையனார் களவியல் உரை அவ்வாறு மனனம் செய்தே பத்துத் தலைமுறைகட்குக் காப்பாற்றப்பட்டு வந்தது என்பதும் அவ்வுரையிலேயே கூறப் பெற்றுள்ளது. எனவே உரைநடை நூல்களாகத்