பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

67



இந்த அடியில் குறிக்கப்படும் பாவம் தொலைந்துவிடும். இனி ஒவ்வோர் அடியையும் சற்றுக் கவனிக்கலாம்.

காட்டில் வந்தனை; தோள்வலி மாமனைக்
கண்டதுண்டம் செய்தின்று வதைத்தனை

என்பது முதலடி. இதன் பொருள் நன்கு விளங்கும். ‘காட்டில் வந்தனை' என்பது வரை ஒற்றெழுத்துக்களை நீக்கிப் பார்த்தால் 5 எழுத்துக்களே உள்ளன. ஐந்தில் இரண்டு நெடில்கள் பயன்பட்டுள்ளன. அதாவது இந்தக் காட்டில் ஒரு சிறுவன் துணிந்து வந்து விட்டானே என்பதில் உள்ள வியப்பும், அதில் ஒரளவு ஐயமும் கலந்துள்ளன. இதே போல தோள்வலி மாமனை வதைத்தனை என்பதில் 10 எழுத்துக்களில் 5 எழுத்துக்கள் நெடிலாகும், அதாவது நடக்கக் கூடாத காரியம் நடந்துவிட்டது; ஒப்பற்ற புய பல பராக்கிரமமுடைய ஒரு மாமன் கேவலம் சிறுவன் ஒருவனால் கொல்லப்பட்டிருக்கிறான். இதனை எப்படி நம்புவது? ஆனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை, மாமன் பல துண்டங்களாகக் கிடக்கின்ற காரணத்தால், இந்நிலையில் மாமன் இறந்ததால் ஏற்படும் துயரத்தைக் காட்டிலும், மாமனைக் கொன்றவன் மேல் ஏற்படும் சினத்தைக் காட்டிலும், அதிகமாக எஞ்சுவது நம்ப முடியாத வியப்பேயாகும். அதனைத்தான் முதலடியிலுள்ள பகுதிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதிலும் ஒரு புதுமையைப் புகுத்தியுள்ளார் சுவாமிகள். முதலடியின் நடுப் பகுதியிலுள்ள மூன்று சீர்களும் ஒரு நெட்டெழுத்தைக் கூடப் பெறாமல் முற்றிலும் குற்றெழுத்துக்களாலேயே ‘கண்டதுண்டம் செய்தின்று' என்று அமைந்துள்ளன.