பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அ.ச. ஞானசம்பந்தன்



இதில் ஏன் நெடிலின் பிரயோகமே இல்லை? உடம்பு எவ்வாறு வெட்டப்பட்டது? சிறுவன் அரிதின் முயன்று இக்காரியத்தைச் செய்யவில்லை. ஏதோ அடித்தான் படாத இடத்தில் பட்டு இவ்வாறு நிகழ்ந்து விட்டது என்றும் கருதுவதற்கில்லையாம். கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில் பல துண்டுகளாக அந்த உடம்பு வெட்டப்பட்டது என்பதைக் கூற வந்த ஆசிரியர், வல்லெழுத்துக்களையே மிகுதியாகப் பயன்படுத்துகிறார். 'கண்ட துண்டம் செய்தின்று' என்ற சொற்களில் ஒற்றெழுத்துக்களை நீக்கிப் பார்த்தால், மொத்தம் உள்ள எழுத்துக்கள் ஏழு. அந்த ஏழுமே வல்லெழுத்துக்களாம்.

அந்த உடம்பு சிறு சிறு பகுதிகளாகக் கிடந்த புதுமையை, 'கண்ட துண்டம் செய்தின்று' என்பதை விடச் சிறந்த ஒசை நயத்துடன் கூற முடியாது. அதுவும் முதல் நான்கு சீர்களும் கடைசிச் சீரும் நெடிலுடன் நிற்க, இடையில் நின்ற இரண்டு சீர்கள் மட்டும் நெடில் இல்லாமல், முற்றிலும் குற்றெழுத்துக்களே பெற்று நடக்கப் பாடியதால், வியப்பு, நம்பிக்கை இன்மை, கொடுமை, துயரம் ஆகிய உணர்ச்சிகள் பின்னிப் பிணைந்து வெளிவருகின்றன. அதிலும் ‘மாமனை' என்ற சொல்லில் மூன்றெழுத்துக்களில் இரண்டு நெட்டெழுத்துக்களாயுள்ளன. அதனை அடுத்து வரும் சொற்களில் 'கண்டதுண்டம்' என்று நெடில் இல்லாத வல்லெழுத்துக்களைச் சேர்த்திருப்பதால் மாமன் என்று கூறும் பொழுது துயரமும், கண்ட துண்டம் என்று அடுத்துக் கூறும் பொழுது அந்த வீரமாமன் கிடக்கின்ற கொடுமையும் பேசப்படுகின்றன எனலாம்.