பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 77

இயல்-இசை-கூத்து

தமிழை இயல்-இசை-நாடகம் என்று வகைப்படுத்தி முத்தமிழாக ஏன் பிரித்தனர் என்பதைச் சற்று ஊன்றி நோக்குதல் நன்று.

நமது இலக்கியங்கள் அனைத்தும் பன்னெடுங்காலமாகக் கவிதை வடிவில்தான் இயற்றப் பெற்றுள்ளன. சென்ற நூற்றாண்டுவரை உரைநடையென்பது பேச்சுவழக்கில் இருந்ததைத்தவிர ஏட்டளவிலோ அல்லது இலக்கிய வடிவிலோ இடம் பெற்றிருந்ததாகத் தெரியவில்லை.

எனவே, இயல் என்னும் கவிதைக் கலை கற்றறிந்த ஒரு சிலரேயன்றி, மற்றையோர்க்கு எட்டாக் கனியாகவே இருந் திருக்க வேண்டும்.

- ஆகவே, அதற்குஅடுத்த நிலையில் சற்று எளியமுறையில் இயற்றப்பெற்று, ஓரளவு அனுபவ அறிவும், எழுத்தறிவும் கொண்ட நடுத்தர மக்களைக் கவரும் வண்ணம் இசையோடு கலந்து பாடும் வகையில் பழகப்பெற்ற, பொருள் பொதிந்த பனுவல்களையே பண்டைத் தமிழர்கள் இசைத் தமிழ் என்று கொண்டனர் போலும்!

ஆயின், நாடகத் தமிழ், என்பது எத்தகையது? அதற் குரிய இலக்கணம் யாது? அதன் பரிமாணத்தைப் பிரதி பலித்துக் காட்டும் பண்டைய இலக்கியங்கள் ஏதேனும் தமிழில் உண்டா...! என்று கேட்டால், தெளிவான சான்று காட்டுவதாகச் சரியான நூல் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. h

தமிழகத்தின் வரலாற்றுத் தலைக் காப்பியமாகவும், நாடகக் காப்பியமாகவும் போற்றிப் புகழப்படும் சிலப்பதி காரத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம். உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்' என்று சிலப்பதிகாரம் சொல் லப்படுவதால், அதன்பால் இயற்றமிழும், இசைத்தமிழும், நாடகத்தமிழும் விரவியிருப்பதாகவும் கூடச் சாதிக்கமுடியும்.