பக்கம்:தமிழ் நாட்டு விழாக்கள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV விழாக்களும் உள. பருவம் போற்றும் விழாக்களும் உள; சாதாரண வேடிக்கை விளையாட்டுக்கள் கலந்த விழாக்களும் உள. அவற்றையெல்லாம் தொகுத்துக்கூறின் அது ஒரு பெருநூலாக முடியும். வாய்ப்பு நேருமேல் பின்னால் அனைத்தையும் சேர்த்துப் பெருநூலாக வெளியிடலாம் என்ற நோக்கோடு, இன்று விழாக்கள் பற்றிய இச்சிறு நூலைத் தமிழ் மக்கள் முன் வைக்கின்றேன்.

விழாக்களின் அடிப்படைக் கொள்கை என்ன என்பதை ஒவ்வொரு விழாவைப் பற்றிய விளக்கத்திலும் குறிப்பிட்டுள்ளேன். விழா, தனிமனிதன் உடைமையன்று. பிறந்த நாள் விழாவும், நீராட்டு விழாவாகிய மண்ணுமங்கலம் போன்ற விழாக்களும், இன்னும் சிலவும் அரசருக்கே உரிய விழாக்களாகத் தமிழ் இலக்கியங்கள் எடுக்துக் காட்டினும், அவையெல்லாம் அரசன் ஒருவனாலேயே கொண்டாடப்பெறுவன அல்ல. தனி அரசன் எவ்வாறு தனக்குத் தானே விழாவினைக் கொண்டாடிக் கொள்ள முடியும்? மற்றவர் அனைவரும் சேர்ந்து ”இன்று மன்னன் பிறந்தனன். மாநிலத்தீர், வாருங்கள்,” என்று உலகத்தாரை அழைத்துச் சிறப்புச் செய்தால்தானே விழாவே சிறப்புறும்? எனவே, தனிமனிதனுக்குச் செய்யும் விழாவுங்கூட, மற்றவர் தொடர்புகளிடையே நடைபெற வேண்டியுள்ளது.

இவ்வாறான தனி மனிதர் விழாவினை விடுத்து, பொது விழாக்களை நோக்கின், அவை மக்கள் வாழ்வைத் திருத்துவனவாக அமைவதையே நாம் காண்கின்றோம். ஏதோ உண்டு, உடுத்து, உல்லாசமாகத் தனி மனிதன் வாழ்வதை எந்த விழாவும் குறிக்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமன்றி, இன்று உலக அரங்கில் நடைபெறும் அத்தனை விழாக்களும் கூடி வாழும் மனித சமுதாயத்தையேதான் அணைத்துச் செல்லுகின்றன. இத்தமிழ்நாட்டு விழாக்களிலும் அத்தகைய பண்பாடுகள் நிறைந்திருப்பதை இந்நூலில் பல்வேறு இடங்களில் விளக்கிக் காட்டியுள்ளேன்.

விழா என்பது நாட்டை வாழ்விக்க வரும் ஒரு நல்ல நாளேயாகும். நாட்டில் எத்துணை வேறுபாடுகள் இருந்தாலும் அவை விழா நாட்களில் இல்லையாக நீங்கப் பெறவேண்டும். மகப்பேறு விழாவிலே மன்னவர்கள் “சிறைவிடுமின்; சிறைக்களமும் சீர்திருத்துமின், ஏழாண்டு தேயத்தீட்டும் இறைவிடுமின்,“ என்று ஆணையிட்டு, தம்