பக்கம்:தமிழ் நாட்டு விழாக்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

 களாம். தீபாவளி விளக்கு வரிசையே கெட்டதை நீக்கும் நல் ஒளியாம். காந்தேச (Khandesh) நாட்டிலே நம் நாட்டு விழாக்கள் போன்று பல விழாக்கள் உண்டாம். எனவே, நாட்டிலும் உலகிலும் நடக்கும் விழாக்களில் ஒரு சில தமிழ் நாட்டிலும் வழக்கத்தில் உள்ளன.

தமிழ் நாட்டில் எத்தனையோ விழாக்கள் நடைபெறுகின்றன. திறப்பு விழா, கால்கோள் விழா என்று நாள்தோறும் பத்திரிகையில் காண்கின்றோம். கம்பன் விழா, வள்ளுவன் விழா என்று புலவர் விழாக்களையும் அறிவோம். இன்னும் எத்தனையோ வகைகளில் நாட்டில் விழாக்கள் நடைபெறுகின்றன. பெண்கள் விளையாடுகின்ற விளையாட்டுக்களையெல்லாம் விழாவாக்கி மணிவாசகர் தம் திருவாசகத்தில் பலப்பல பாடல்கள் பாடுகின்றார். அவைகளெல்லாம் தமிழ் நாட்டு விழாக்கள் தாம். அவ்விழாக்களுள்ளே மக்கள் பலராலும் போற்றப்படும்- நன்கு ஆற்றப்பெறும்-ஒரு சில விழாக்களைப் பற்றியே இந்நூலில் குறித்துள்ளேன். இவற்றுள் சில முன்னமே சிற்சில இதழ்களில் வெளிவந்துள்ளன. ஒரு சில புதியன.

தமிழ்நாட்டுப் பழைமையைப் புத்துலகுக்குக் கொண்டுவந்து காட்ட வேண்டுமெனப் பலர் விழைகின்றனர். அவ்விழைவில் பழைமை, புதுமை நலம் பெற்றுப் பொலிய வேண்டுவது ஒன்றாகும். எனவே, அத்துறையில் நம் நாட்டுப் பழைய விழாக்கள் சிலவற்றை எடுத்து, அவை இன்றும் என்றும் கொண்டாடத்தக்கன என்பதை இந்நூலில் ஓரளவு காட்டியுள்ளேன்.

இந்நூல் வெளி வரும்போது ஒப்பு நோக்கி உதவிய அன்பர் திரு. மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களுக்கு என் நன்றி உரியதாகுக.

சென்னை-30,
13-4-'56
அ. மு. பரமசிவானந்தம்,