பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தமிழ் நாவல்

அவர்கள் எல்லாருமாகப் பிடித்துக் கட்டி வாயில் வந்தபடி யெல்லாம் திட்டி அடிக்கத் தொடங்கினார்கள். நடந்த உபசாரத்தைச் சகியாத பிள்ளையவர்கள், "இன்று நீவிர் பிழைத்தீர்; இங்ஙனம் பிழையீர்! என் கொடுமை! நீவிர் பலர், நான் தனி" என்று இலக்கணமாய்ச் சொன்னார்." [1] பிழைத்தீர் என்பதற்குக் குற்றம் செய்தீர் என்று ஒரு பொருள் உண்டு என்று அடித்தவர்களுக்குத் தெரியுமா? அவர்கள் திருடன் தம்மை மிரட்டுவதாக எண்ணிப் பின்னும் அடித்தார்களாம்.

இந்தச் சாது மனிதராலும் ஒரு காரியம் ஆகிறது. ரெயில் விபத்தில் மாட்டிக்கொண்ட கமலாம்பாள் முதலிய மூவரை அவர் காப்பாற்றுகிறார். திருவொற்றியூரில் முத்துசாமி ஐயரைத் தேடப் போய்க் கவிப்பிரசங்கத்தில் தம்மை மறந்து ஒரு கள்ளப் பண்டாரத்தினிடம் ஏமாந்து பணத்தைப் பறி கொடுக்கிறார். இந்தச் சம்பவத்தால், உரிய காலத்தில் திருவொற்றியூரில் இருந்த முத்துசாமி ஐயரை அவர் பார்க்க முடியாமல் போகிறது. இவ்வாறு அவரைக் கதைக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஆசிரியர். முதலிலே கூட அவருடைய இயல்பை வெறும் தமாஷ் அளவில் சொல்லி நிறுத்தாமல் பல பையன்களும், அவரிடம் குறும்பு செய்து மையை அவர் உடையில் கொட்டிக் கைகொட்டிக் கெக்கலிக்க, முத்துசாமி ஐயரின் மாப்பிள்ளையாகிய ஸ்ரீநிவாசன் இரக்கம் கொண்டு அவருக்குத் தன் மேலாடையைத் தருவதாக அமைத்து, ஸ்ரீநிவாசனின் பண்பைக் காட்டும் வகையில் இணைக்கிறார்.


பிற பாத்திரங்கள்

கதையில் வரும் - சூழ்வினைகளுக்குக் காரணமான பொன்னம்மாள் பொறாமையும், . சூழ்ச்சியும், திரித்துக்


  1. 1. ப. 170.