பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

93

சிக்கல் தெளிதல்

ப்படிச் சிறிது சிறிதாகத் தோன்றி வளர்ந்த பெரிய சிக்கல் மிக எளிதில் தீர்ந்து விடுகிறது. நாராயணன் கோபாலனைத் தனியே சந்தித்துத் தன் ஐயத்தை வாயாரக் கேட்டு விடுகிறான். கோபாலனே திடுக்கிட்டுப் போகிறான், ஐயத்துக்குக் காரணமான முதல் கடிதம் தான் சாலாவுக்கு எழுதினதென்பதை மெய்ப்பிக்கிறான், இருள் மூட்டம் விலகுகிறது. 'இந்தச் சந்திப்பு முன்னேயே ஏன் நிகழவில்லை? நிகழ்ந்திருக்கலாமே!' என்று கதை படிப்பவர்களுக்குத் தோன்றலாம், சிக்கல் விளையும் அழுத்தத்துக்குத் தக்கபடி, 'இது தான் சரி' என்று ஒப்புக் கொள்ளும் வகையில் ஐய நீக்கத்துக்குரிய நிகழ்ச்சி இருக்கவில்லை. ஃபோர்டு மாடக்ஸ் ஃபோர்டு என்பவர் கூறும் கருத்து இங்கே நினைவுகூரத் தக்கது; 'மற்ற எல்லாவற்றிற்கும் முன்பு, இது நடந்திருக்கத்தான் வேண்டும் என்ற உணர்வைக் கதை உண்டாக்க வேண்டும். அதில் கடக்கும் சம்பவம் இப்படித்தான் நடக்க முடியும், வேறு வகையில் நடக்க நியாயம் இல்லை என்ற கருத்தைத் தோற்றுவிக்க வேண்டும்’[1] என்று அவர் எழுதுகிறார்.

இந்தக் கட்டத்தில் ஐயம் நீங்குவதற்குரிய நிகழ்ச்சி இப்படிச் சாமான்யமாக அமைவது குறைதான்; ஆனாலும் மிகப்பெருங் குறையாகத் தோன்றாது. ஐயம் உறுதிப்படுவதற்காக அடியிலிருந்து கட்டிய கட்டிடம் பொருத்தமாகவும் காரணகாரியத் தொடர்போடும் இருப்பதனால் அந்தச் சிறப்பிலே நாம் ஈடுபட்டு விடுகிறோம்,


  1. Ford Madox Ford (1924): Quoted in Novelist's on the Novel by Miriam Allott, 245